முற்றுகை
முற்றுகை புதிய தலைமுறை
தமிழ்நாடு

பணிமனைகள் முன் முற்றுகை போராட்டத்தை துவங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள்... கைது செய்யும் காவல்துறை

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய போராட்டத்தின் முடிவில், “அரசாங்கம் எங்களது கோரிக்கைகளுக்கு இன்று செவிசாய்க்காததால், சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்திலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் நாளை முற்றுகை போராட்டத்தினை நடத்தப்போகிறோம்” என்று தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் முற்றுகை போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடத் தொடங்கினர்.

இதில் குறிப்பாக தஞ்சை, திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், சென்னை பல்லவன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக சென்னை பல்லவன் இல்லத்தின் முன் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக CITU மாநில தலைவர் செளந்தரராஜன் நேற்றைய தினமே “எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவும் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை. எனவே போராட்டத்தை தீவீரப்படுத்த முடிவு செய்துள்ளோம். நாளை அனைத்து பணிமனைகளிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும். சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து சங்கங்கள்

மேலும் ‘போராட்டத்தினை கைவிடாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரிக்கை விடுத்தும் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது என்பது கூடுதலான செய்தி. தற்போது போராட்டத்துக்கு சென்றுள்ள தொழிலாளர்களின் விவரங்கள் பெறப்பட முடிவுசெய்யப்பட்டுள்லது. அவர்கள் அனைவருக்கும் மெமோ அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இத்தோடு, ஒருசில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.