மீட்கப்பட்ட முதியவர்
மீட்கப்பட்ட முதியவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

தருமபுரி | சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு அப்பாவை வீதியில் விட்டுச் சென்ற ஆறு பிள்ளைகள்!

PT WEB

தருமபுரி மாவட்டம் காந்தி நகர் பகுதியில் 85 வயதான பெருமாள் என்ற முதியவரை, அவரது உறவினர்கள் ஆட்டோவில் அழைத்துவந்து இறக்கிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விசாரித்ததில், தான் நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். இரவு நேரம் என்பதால் குளிரில் இருந்த அவருக்கு அப்பகுதியினர் சாப்பாடு கொடுத்து போர்வையும் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் காலை வரை அவரை மீட்க யாரும் வரவில்லை. இரவு முழுவதும் குளிரில் நடுங்கியபடி தவித்து வந்துள்ளார் முதியவர் பெருமாள். இதையடுத்து அப்பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முதியவரை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கு உத்திரவிட்டார்.

தொடர்ந்து வருவாய் துறை ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர் உறவினர்களிடம் விசாரணை செய்தபோது முதியவருக்கு ஆறு பிள்ளைகள் இருப்பதும், சொத்து பிரச்சனையில் அவரது அனைத்து சொத்துக்களையும் பிள்ளைகள் எழுதி வாங்கிவிட்டு அனாதையாக விட்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வருவாய்த் துறையினரின் அறிவுறுத்தல்படி, உறவினர்கள் முதியவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தந்தையை அனாதையாக தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.