2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11,48,019 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான விடைக்குறிப்பும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகாப்பில்லாமல், அட்டைப்பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும், முறையாக சீலிடப்படாமலும் இருக்கிற புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவின.
இதனால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதில் கட்டுகள் பிரிக்கப்பட்டு, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "குரூப் 4 விடைத்தாள்கள் டிரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படாது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும். ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.