செல்வப்பெருந்தகை - விஜய் முகநூல்
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை!

“சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைத்தால் I.N.D.I.A. கூட்டணிக்கு வர வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 86 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருக்கும் அவருடைய சிலைக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை;

“மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே இருக்க கூடாது என அவர் காலத்தில் மிக தீவிரமாக களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவருடைய பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி” என்றார்.

தொடர்ந்து விஜய் குறித்து பேசிய அவர், “பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை விஜய் நேரில் சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. அதேபோல் பரந்தூரில் வாழ்கின்ற மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்க கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமும். இதை ஏற்கனவே காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இது குறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையிலும் பேசப்பட்டது” என்றார்.

தொடர்ந்து அவரிடம் ‘விஜய் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பது காங்கிரஸ் விருப்பமா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்துத்துவா சக்திகளை அழிக்க வேண்டும் என விஜய் நினைத்தால் அவர் I.N.D.I.A. கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும், அவர் கொள்கை கோட்பாடு என எல்லாவற்றுக்கும் நல்லது” என்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, “இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். திமுக வேட்பாளரை ஆதரித்து விரைவில் காங்கிரஸ் நிர்வாகிகள் பரப்புரையில் ஈடுபடுவார்கள்” என்று தெரிவித்தார்.