சென்னை: 2 வாரங்களில், உயிரிழந்து கரை ஒதுங்கிய 300க்கும் மேற்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைகள்.. என்ன நடந்தது?
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை, கடந்த இருவார காலத்தில் 300க்கும் அதிகமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் உயிரிழந்துள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆமைகள் இல்லாவிட்டால் மீன் இனமே இருக்காது என்பதால் ஆமைகளை வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். கடலில் பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோனி ஆமை, ஓங்கில் ஆமை போன்ற வகைகள் உள்ளன. ஜெல்லி மீன்கள், மீன்களின் குஞ்சுகளை சாப்பிடுவதால் கடலில் மீன்வளம் குறைகிறது. ஆனால் கடல் ஆமைகள் பவளப்பாறையில் உள்ள பாசிகள் மற்றும் ஜெல்லி மீன்களையே சாப்பிடுவதால் கடலில் மீன்வளம் பாதுகாக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் மீனவ நண்பனாக விளங்குகிறது.
அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை இனத்தில் முட்டைகளில் இருந்து வெளிவரும் ஆயிரம் குஞ்சுகளில் ஒரே ஒரு ஆமை குஞ்சு மட்டும்தான் பிழைத்து உயிர் வாழும். இத்தகைய ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழக கடற்பகுதிக்கு வருவது வழக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிவருகின்றன. நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை நீங்கள் கடற்கரையோரம் நடந்து சென்றால் ஏராளமான ஆமைகள் இறந்து கரையோரம் இருப்பதை பார்க்க முடியும்.
கடற்கரையில் பல நாட்களாக ஆமைகள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் அதிகப்படியான ஆமைகள் உயிரிழப்பு இந்த 15 நாட்களில் நடைபெற்று இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் வனத்துறை சார்பாக ஆமைகள் குறித்து 2 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவளம் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் நடத்தப்பட இருக்கிறது.