காவல் அதிகாரிகள் Pt web
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி.? 3 காவல் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!!

தமிழக உள்துறை துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட காவல்துறை உத்தரவின்படி, இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 3 காவல் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Premkumar S

சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி மீதான பாலியல் வழக்கு இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக எழுந்த புகாரையடுத்து வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, அவரது தொடர்புடைய மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, வீரமணியின் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறப்படும் கணேசன் என்பவரையும் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் கைது

இதற்கிடையில், வீரமணி தொடர்பாக 2024-ஆம் ஆண்டிலேயே காவல்துறையில் புகார் அளித்திருந்தாலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையிலும், தாம் ஏற்கனவே அளித்த புகார் குறித்து எந்தவித குறிப்பும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார்.

இந்தச்சூழலில் தான், ரஞ்சன் குமார் கூறிய காலக்கட்டத்தில் சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்த அருண் ஐபிஎஸ் மற்றும் சென்னை மாநகரக் காவலில் முக்கியக் காவலில் இருந்த கண்ணன் ஐபிஎஸ் ஆகியோரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர்களை காத்திருப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, தற்போது, கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக யாஸ்மினுக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.