\
Chennai Metro
Chennai MetroANI

மெட்ரோ | தயார் நிலையில் பூந்தமல்லி - வடபழனி வழித்தடம்.. எதிர்பார்க்கும் பயணிகள்.. திறப்பு எப்போது?

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடம் தயாராக இருந்தும், பிரதமரின் திறப்பு விழா தேதி உறுதியாகாததால், பயணிகளுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.
Published on

செய்தியாளர்: துர்கா தேவி ச

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பாதுகாப்பு அனுமதி கிடைத்தும், திறப்பு விழாவுக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து (PMO) உறுதிப்படுத்தப்பட்ட தேதி வராததால் பல மாதங்களாக பயணிகள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் உள்ள முதல் வழித்தடம் சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இது பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ வழித்தடமாக பயணிகளின் சேவைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட நிலையங்கள் உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடமிருந்து வணிக ரீதியிலான செயற்பாட்டிற்கு நிபந்தனையுடன் கூடிய தற்காலிக அனுமதி கிடைத்தது. அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விதித்த நிபந்தனைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறைவேற்றியது. பின், மே மாதத்தில், சில தளர்வுகளுடன் இறுதி அனுமதியும் கிடைத்தது.

PTI

பிரதமரின் தேதி கிடைக்காதது ஏன்?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முதல் வழித்தடத்திற்கு இறுதி அனுமதி கிடைத்ததும், இந்த வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக திறந்து வைக்க, CMRL பிரமாண்டமாக நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டது. ஆனால், தற்போது செப்டம்பர் 21 வரை எந்த அதிகாரபூர்வ ஒப்புதலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து இன்னும் வரவில்லை என சென்னை மெட்ரோ ரயில் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

செப்டம்பர் இறுதியில் திறப்பு விழா நடைபெறும் என்ற நிலையில், செப்டம்பர் 21 தாண்டியும் பிரதமரின் தேதி உறுதி செய்யப்படாத நிலையில் இருக்கிறது. அக்டோபர் முதல் வாரத்தில் திறப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும், பிரதமர் சென்னைக்கு வருகை தரும் போது, மெட்ரோ ரயில் திறப்பு விழாவையும், மற்ற நிகழ்ச்சிகளையும் இணைத்து நடத்த வாய்ப்புள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமரின் அலுவலகத்திலிருந்து திறப்பு விழா தேதி இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த நீளம் 118.9 கி.மீ ஆகும். பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் 4-ஆம் வழித்தடத்தின் ஒரு பகுதி. இது முழுவதுமாகச் செயற்பாட்டிற்கு வந்தால், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.

Metro rail
Metro railANI

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மெட்ரோவின் 11 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தையும், சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்ட வழித்தடத்தையும் ஒரே நேரத்தில் டெல்லியிலிருந்து காணொளி மூலம் திறந்து வைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்தத் திட்டமும் நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com