எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் சந்திப்பு x
தமிழ்நாடு

அதிமுக 170, பாஜக 23, பாமக 23? பியூஸ் கோயல் உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. நடந்தது என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்தியமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பின் போது, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில், பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்தனர். அதிமுகவிற்கு 170, பாஜகவிற்கு 23, பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளன. பன்னீர் செல்வம் மற்றும் அமமுக அணிகளுக்கும் தொகுதிகள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது செயல்பாடுகளை கட்டமைத்து வருகின்றன. ஆளும் கட்சியாக இருந்து வரும் திமுக 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக என 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக அமைத்த அதே கூட்டணியுடன் வலுவாக இருக்கிறது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இதுவரை எந்தப் பெரிய கட்சிகளும் இணையவில்லை. மேலும், அதிமுக கட்சியிலும் ஏற்ப்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக பல அணிகளாக பிரிந்து இருக்கிறது. இதன்காரணமாக இந்தக் கூட்டணி பலமற்றத்தாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தாங்கள் பலமாக இருப்பதாக அதிமுக தெரிவித்து வருகிறது.

பியூஷ் கோயல்

இந்த நிலையில்தான், தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நியமித்து அறிக்கை வெளியிட்டது பாஜக தலைமை. பியூஷ் கோயல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவரை தமிழக பாஜக வின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தன் மூலம் பாஜகவுக்கு தமிழ்நாடு தேர்தல் வெற்றி எவ்வளவு அவசியம் என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மையக்குழுக் கூட்டம், பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் என அடுத்தடுத்த நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து, இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைந்து மக்கள் விரோத திமுக அரசை தோற்கடிப்போம். அதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க இன்று முதல்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு

எடப்பாடி கே. பழனிசாமி - பியூஷ் கோயல் சந்திப்பின் போது.!

முன்னதாக, பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பின் போது, கூட்டணிகள் கணக்குகள் குறித்தும், தொகுதிப்பங்கீடு குறித்தும் பேசியதாகவும் அதிமுக முடிவு செய்துள்ள தொகுதிப்பங்கீடு அட்டவணையை பியூஷ் கோயலிடம் அளித்ததாகவும் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து, அந்த சந்திப்பில், பன்னீர் செல்வம் ஆதரவு அணி மற்றும் அமமுக ஆகியவை தேஜ., கூட்டணியில் இடம்பெற எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதல் அளித்ததாகவும், அதன்படி, அமமுக-விற்கு 6 தொகுதிகள் மற்றும் பன்னீர் செல்வம் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்தப் பேச்சு வார்த்தையில், பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இரு அணிகளுக்கும் சேர்த்து 23 தொகுதிகளை ஒதுக்கவும், இரு அணிகளையும் ஒருங்கிணைக்க அதிமுக பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவிற்கு 170 தொகுதிகளும், பாஜகவிற்கு 23 தொகுதிகளும் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து, தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், " பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் குறித்தும், கடந்த தேர்தல்களின் செயல்பாடுகள் குறித்தும் தான் விவாதிக்கப்பட்டது. தொகுதிப்பங்கீடுகள் குறித்து விவாதிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.