எடப்பாடி பழனிசாமி - டி.ஆர்.பி.ராஜா முகநூல்
தமிழ்நாடு

“புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு?” - கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி... பதிலளித்த அமைச்சர்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலளித்துள்ளார்.

PT WEB

எடப்பாடி பழனிசாமி கேள்வி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பெருமளவு முதலீடு கொண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்த மாநாட்டில் பங்கேற்றார். ஆனால், எவ்வளவு முதலீடு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது என எந்த தகவலும் இல்லை.

இதன் மூலம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய போட்டி நடப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரிய வருகிறது. திமுக ஆட்சியில் எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இதற்கு பதிலளித்துள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கடந்த மூன்று ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தனது அறிக்கை அமைச்சர், “டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரையை பதித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் என்பது முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல. உலகளாவிய தொழில் வளர்ச்சி எந்தத் திசையில் பயணிக்கிறது, அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்தெந்த துறையில் முதலீடுகள் பெருகும் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளவும் பரிமாறக் கொள்ளவுமான சந்திப்பு.

கடந்த மூன்று ஆண்டுகளில் பன்னாட்டு - உள்நாட்டு நிறுவனங்களுடன் 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் விளைவாக 10,07,974 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும், மேலும் 19,17,917 நேரடி வேலைவாய்ப்புகளுடன் 31,53,862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழலை அமைத்து, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாக்கி, வேலைவாய்ப்பை வழங்கி, உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன. தமிழ்நாடு மிகச்சிறந்த மையமாக திகழ்வதை உலக நாடுகளிடம் உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.