முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட நிலையில், பலவேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரது நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது.
முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். முதல்வர் விஜயின் ஆட்சியில், தமிழக அரசில் சிறப்புப் பணி அதிகாரியாக வெற்றிவேல் பதவி உயர்வு பெற்றதால், அவரது செல்வாக்கும் உயர்ந்தது. ஆனால், முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு தனி அலுவலராக, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், விசிக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், ’ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அரசு பதவியில் நியமிக்கப்பட்டதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க முடியுமா’ என வினவியிருந்தார்.
’மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல என்றும், முதல்வர் விஜய் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனவும், விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. முன்னதாக, இன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தின்போது தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா இதுகுறித்து கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே அவரது நியமனம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.