விஜய் - மான்டேக் சிங் அஹ்லுவாலியா Pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் வருவாயை பெருக்க குழு.. 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!

மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக வருவாய் பெருக்கக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Premkumar S

தமிழக அரசின் நிதித்துறை, மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக வருவாய் பெருக்கக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விகிதம் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதும், பல்வேறு வரி வருவாய்களில் சரிவு ஏற்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, வருவாய் கசிவுகளைத் தடுத்து, வரி வசூலை மேம்படுத்தி, புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மான்டேக் சிங் அஹ்லுவாலியா

இந்தக் குழுவின் தலைவராக பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக் குழுவின் (Planning Commission) துணைத் தலைவருமான மான்டேக் சிங் அஹ்லுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி நஜிப் ஷா (ஐ.ஆர்.எஸ்., ஓய்வு), எம்.ஏ. சித்திக், ஐ.ஏ.எஸ் சுரேஷ் பாபு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை அதிகரிப்பதற்கான கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு பரிந்துரைக்கும்.

மேலும், புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல், வருவாய் கசிவுகளைத் தடுப்பது, வருவாய் வசூலில் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும்.

மதுபானங்களின் மீதான வருவாயை அதிகரிப்பதற்காக, மதுபான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு கொள்கைகளில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்கும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மாத காலத்திற்கு செயல்பட்டு, தனது பரிந்துரைகள் மற்றும் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.