கரூர் | உயிரிழந்தவருக்கு அரசுப் பணி.. ரத்துசெய்து உத்தரவு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
செய்தியாளர்: சகாயபிரதீபா, மதுரை
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அகமது, திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் மதுரை அமர்வில், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கும் முடிவை நடைமுறைப்படுத்த தடை விதிப்பதோடு, போட்டித் தேர்வு மற்றும் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் அடிப்படையில் அரசு பணிகளை நிரப்ப உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன் சக்திவேல் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "அரசுத் தரப்பில் ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும், அரசுப்பணியும் வழங்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டுவதை ஏற்க இயலாது. கரூர் சம்பவத்தை அப்படி எந்த வரையறைக்குள்ளும் கொண்டு வர இயலாது. அவ்வாறிருக்க அதனை முன்னுதாரணம் காட்டி அரசுப்பணி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. 1992 கும்பகோணத்தில் 95 மாணவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் வெள்ளத்தால் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் கரூர் சம்பவத்தில் அரசுப் பணி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு வழங்க வேண்டுமெனில் அரசாணையைப் பின்பற்ற வேண்டும் அல்லது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, இதுபோன்ற சம்பவங்களில் பின்பற்ற வேண்டும். இது சேவை சார்ந்த வழக்கு அல்ல (service matter). சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். 20 லட்சம் பேர் ஏறத்தாழ ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், "2018இல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் வழக்கிலும் அரசுப்பணி வழங்கப்பட்டது. இதற்கு முந்தைய அரசுகளும் கருணைப்பணி வழங்கியுள்ளன. ஆனால், இந்த வழக்கில் மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை கூட்டத்தை முறையான கையாளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டாலும், அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் கண்காணிப்பிலேயே விசாரணை நடைபெறுகிறது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். கருணைப்பணி வழங்குவது அவர்களின் குடும்பத்திற்கு உதவும் எனும் நோக்கிலேயே அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பில், "இது போன்ற பாதிக்கப்பட்டவர்களிலிருந்து, கரூர் சம்பவம் எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? என விளக்கம் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
TNPSC தரப்பில், "2018இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 100-ன் அடிப்படையில், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட நபர்களின் பணியை நிரந்தரம் செய்ய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்புதல் பெறவேண்டிய நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில், "கருணை அடிப்படையிலான பணி தொடர்பான வழக்குகளில் பெரும்பாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவுவதே, முக்கியமானதாகக் கருதப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதை செய்தியாளர் எதிர்த்து பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அரசுப்பணி ஆணை வழங்கும் விழா அன்று, தற்காலிக அடிப்படையிலேயே பணி வழங்கப்பட வேண்டும். முதல் மாதம் ஊதியம் பெறும் முன்பாக வழக்கு விசாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு உதவும் வகையில், மனுதாரர், அரசுத்தரப்பு என அனைத்துத் தரப்பிலும் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள்.
இது சர்வீஸ் வழக்கு அல்ல. எனவே, கருணை அடிப்படையிலான இந்தப் பொதுநல வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அதுதொடர்பான கேள்வி எழும் போது, உச்சநீதிமன்றம், நீதிமன்றம் இயல்பாக வழங்கும் நிவாரணங்களைக் கோரலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு விவகாரம் நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது எனும்போது, பொதுநல வழக்காக விசாரிக்க அதிகாரம் உள்ளது. அதேசமயம் சில வழக்குகளில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என்றும் பல உச்சநீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. அவை சில தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை எதிர்த்த வழக்குகள். ஆனால் இந்த வழக்கு முற்றிலும் வேறானது.
கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணையை கண்காணித்து வரும் சூழலில் எத்தகைய கருத்தையும் இந்த நீதிமன்றம் முன்வைக்க விரும்பவில்லை. விசாரணையின்போது அரசுத் தரப்பில், "ஒவ்வொரு துறையிலும் காத்திருப்புப் பட்டியல் உள்ளது. அவற்றை பரிசீலித்து, முறைப்படியே பணி நிரந்தரம் செய்வர். உடனடியாக நிரந்தரப் பணி செய்யப்படாது" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "அரசுப் பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலைவாய்ப்பு கோரினால் எப்படி? சிவகாசியில் அடிக்கடி வெடிவிபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப்பணி கோரினால் என்ன செய்வது? என்ற கேள்விகளும் எழுகின்றன.
1.விதி14 (சட்டத்தின் முன் சமத்துவ உரிமை) விதி 16 (அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை) ஆகிய விதிகள் இந்த விவகாரத்தில் அரசுப்பணி வழங்குவதில் மீறப்பட்டுள்ளது.
2.இவ்வாறு அரசு பணி வழங்கினால், பலரும் இதுபோல அரசு பணி கேட்க வாய்ப்பாக அமைந்துவிடும்.
3.கருணைப் பணிப்பெற்ற பலர் பணி நிரந்தரம் பெற காத்திருக்கும் சூழலில், இவ்வாறு அரசுப்பணி வழங்குவது முறையானதாக இருக்காது.
திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்” என கருத்து தெரிவித்தனர்.
மேலும், ”அரசுத்தரப்பில் 32 பேரின் குடும்பத்திற்கு சாதாரணப் பணி வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரணப் பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் முக்கிய பணியே.
எனவே கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டு, ”தொடக்கத்திலேயே முதல் மாத ஊதியம் பெறும் முன்னரே வழக்கு விசாரித்து முடிக்கப்படும். அதனடிப்படையில் விசாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

