தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு, 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, கூட்டணிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ராகுல்காந்தி தமிழகத்தின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார் என கூறப்பட்டு வந்தது. அதை வலுசேர்க்கும் வகையில், ஏப்ரல் 6 தேதி புதுச்சேரியில், முதல்வர் ஸ்டாலினும், ராகுல்காந்தியும் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபட்டனர். எனினும் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
இதையடுத்து, ராகுல்காந்திக்கும் திமுகவுக்குமான முரண்பாடு தொடர்ந்து வருகிறது எனப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இன்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து பரப்புரை நடைபெறும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சென்றார். தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், இரண்டாவதாக, இன்று பிற்பகலில் சோளிங்கர் தொகுதியில் பரப்புரையில் கலந்துகொண்டார்.
அங்கு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம், அரக்கோணம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழில் கரோலின், ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.காந்தி, ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இந்த பொதுக்கூட்ட மேடையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாடு தேர்தல் 2026, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழ்நாட்டைத் தங்களுக்குள் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கானது என பேசித் தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் நேற்று நரேந்திர மோடியும், அமித் ஷாவும் என்ன செய்ய முயன்றார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை கொண்டு வருவதாக கூறி உண்மையை குழி தோண்டி புதைத்தார்கள். அந்த மசோதாவிற்குப் பின்னால் ஒரு வஞ்சகமான எண்ணம் இருந்தது. அவர்கள் இந்தியாவின் தேர்தல் வரைபடத்தையே மாற்ற விரும்பினார்கள். பிரதமர் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்துவதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். தற்போது பா.ஜ.க தமிழ்நாட்டின் அடையாளத்தையும் அதன் சித்தாந்தத்தையும் தாக்கி அழிக்க முயன்று வருகிறது. அவர்களுக்கு அதிமுக என்ற ஒரு கூட்டாளி இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் கட்சிக்குத் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த பாரம்பரியம் இருந்தது. ஆனால், அதிமுகவை முழுமையாக கைப்பற்றி உள்ளது பாஜக. அதிமுகவை பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைய ஒரு கருவியாக பயன்படுத்துகிறது; அது நடக்காது.
அதேபோல, அனைத்து மதங்களும் பாரம்பரியங்களும் மொழிகளும் நேசிக்கப்பட்டு மதிக்கப்படும் இந்தியாவையே நாங்கள் விரும்புகிறோம். தற்போது நடப்பது இரு வேறு சித்தாந்தம், இரு வேறு பார்வைகளுக்கு இடையேயான போராட்டம். பாஜகவின் அந்த பார்வையை நாங்கள் தோற்கடிப்போம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் உண்மை அவருக்கு தெரியவரும். திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாடு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இன்று மூன்றாவதாக திருச்சி துறையூர் தொகுதி, முசிறி பிரிவு சாலை அருகே உள்ள தனியார் மைதானத்தில் ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பரப்புரையை முடித்துக்கொண்டு டெல்லி செல்லும் அவர், நாளை மறுநாள் மீண்டும் தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.