திருப்பூர்| முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி.. 25 விவசாயிகள் கைது!
திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இனாம் நில பிரச்சனை, ஆனைமலையாறு நல்லாறு திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என குற்றம்சாட்டி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருப்பு கொடி, கருப்பு பலூன் காட்டி அனுமதியின்றி போராட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 25 விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திமுக அரசு இனாம் நில விவகாரம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது திருப்பூர் மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் முடிந்தவுடன் இனாம் நில பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். அதேபோல் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதாக கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கருப்பு கொடி மற்றும்
கருப்பு பலூன் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சரின் திருப்பூர் வருகையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

