தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 344 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், வெள்ளிமலை மலை கிராமப் பகுதியில் உள்ள மரகதம் பொன்னுச்சாமி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், 245 வது வாக்குச்சாவடி மையம் உள்ளது. அங்கு செல்ல, ஆண்டிப்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடமலைக்குண்டு பகுதி வரை நல்ல தார் சாலைகளிலும், அங்கிருந்து மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி வரை ஆங்காங்கே சேதமடைந்த கிராமப்புற சாலைகளிலும், அதற்கு பிறகு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாத மிகவும் சேதமடைந்த மலை சாலைகளிலும் பயணிக்க வேண்டும். இந்த வாக்குச்சாவடியில், மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதில், இரண்டு பெண் வாக்காளர்கள், மூன்று ஆண் வாக்காளர்கள் ஆவர்.
அதில், இரண்டு பேர் அப்பகுதியிலேயே தங்கி உள்ள நிலையில் மீதி மூன்று வாக்காளர்கள் நாளை காலைக்குள் வந்து வாக்குப்பதிவுகளை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம், இவ்வளவு தூரம் அடர் வனப்பகுதியில் பயணம் செய்து ஒரு மலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைப்பது; ஒரு வாக்கு எவ்வளவு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் மொபைல் ஜீப் வாகனத்தில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர் , ஒரு துணை இராணுவபடை வீரர் மற்றும் வாக்குப்பதிவிற்காக மண்டல அலுவலர், துணை மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்கின்றனர்