eps, stalin x page
தமிழ்நாடு

”கர்ச்சீப் எதற்கு..” - இபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்.. டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்ற நிலையில், பேசுபொருளானது. இதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Prakash J

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்ற நிலையில், பேசுபொருளானது. இதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இபிஎஸ்ஸைக் கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

திமுக சார்பில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு கரூர்-திருச்சி புறவழிச் சாலையில் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும்விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கட்சிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதாவை எதிர்க்க நாம் துணியாவிட்டால் மாநிலங்கள் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். ஆதிக்கத்திற்கு நோ என்ட்ரி... அதிகாரத்துக்கு நோ என்ட்ரி மொத்தத்தில் பாரதிய ஜனதாவுக்கு தமிழகத்தில் நோ என்ட்ரி என தெரிவித்தார்.

ஈராயிரம் ஆண்டுகளாக காவிக் கூட்டத்துடன் போராடுவதாகவும், அவ்வாறு போராடிப் பெற்ற நமது உரிமைகளை பறிகொடுக்க முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ’அண்ணாயிஸம்’ என தொடங்கப்பட்ட அதிமுகவை, ’அடிமையிஸம்’ என மாற்றி இப்போது ’அமித் ஷாயிஸம்’ என எடப்பாடி பழனிசாமி அடகுவைத்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தன்னை எடப்பாடி பழனிசாமி ஒருமையில் விமர்சிப்பதாக முதல்வர் சாடினார். காலிலேயே விழுந்த பழனிசாமிக்கு முகத்தை மறைக்க கைக்குட்டை எதற்கு என முதல்வர் கேள்வியெழுப்பினார். ரெய்டுக்கு பயந்து எடப்பாடி பழனிசாமி அ,தி.மு.கவை அடகுவைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

விமர்சனத்தை ஏற்படுத்திய இபிஎஸ்ஸின் கர்ச்சீப் விவகாரம்

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி விவகாரம் பூதாகரமாகி வருகிறது. முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளருக்கு கோரிக்கை வைத்திருந்தார். பின்னர், அதுதொடர்பாக அவர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் செங்கோட்டையன் கருத்து தொடர்பாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த நாளே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்றார். அவரின் இந்தச் செயல் தமிழகத்தில் கடுமையான விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, ”முகத்தை மறைத்துக் கொண்டு இன்று பலர் திரிகின்றனர். அதில் அரசியல்வாதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், தனது முகத்தை கைக்குட்டையால் மூடக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே அசிங்கப்பட்டு வருவதாக அர்த்தம் அல்லது ஒரு தவறைச் செய்வதற்கு வருவதாக அர்த்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

”முகமுடியார் பழனிசாமி" என்று அழைத்த டி.டி.வி.தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “பழனிசாமி ஏன் முகத்தை மறைத்துவிட்டு வர வேண்டும்? இதுவரை எந்த தலைவர்களும் இப்படி நடந்துகொண்டது இல்லை. பழனிசாமியை இனி முகமூடியார் பழனிசாமி என அழைக்கலாம்” எனக் கிண்டலடித்துள்ளார்.

டிடிவி.தினகரன்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”அதிமுகவின் உட்கட்சி பிரச்னையைப் பேசி தீர்க்க இடம் இருக்கிறது. ஆனால் ஏன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கிறார்கள்? கூட்டணிக் கட்சிகளை பிளவுப்படுத்தும் வேலையை பாஜக செய்கிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதில் தவறு இல்லையே? இருவரின் சந்திப்பில் நல்லதுதானே இருக்கும். எதிர்க்கட்சியினரைச் சந்தித்தால்தான் பிரச்னை என கூறலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இபிஎஸ் - அமித் ஷா

இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக ஐடி விங் அளித்த விளக்கத்தில், “அமித் ஷாவின் சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக் கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை. முகத்தைத் துடைப்பதை, மூடிக்கொண்டு சென்றதாக Fake Narrative செய்யப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தது.