mk stalin pt
தமிழ்நாடு

சூறையாடிய ஃபெஞ்சல் புயல்.. ரூ.2000 கோடி நிவாரணம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பல மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை பொழிவால் வெள்ளக்காடாக மாறிய குடியிருப்பு பகுதிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயலால், கடந்த 3 மூன்று நாட்களாக பரவலாக பலத்த காற்றுடன் கூடிய அதிக கனமழையை பெய்து வருகிறது.

ஆரம்பத்தில் புயல் வருமா? வராதா? என்ற குழப்பங்கள் நீடித்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பலமான மழைப்பொழிவை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் மிகப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதனால் விழுப்புரம் முதலிய பல மாவட்டங்களில் நூறு ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு மழை பொழிவு ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து வீதிக்கு வரவழைத்துள்ளது.

Cyclone Fengal

இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை சரிசெய்ய நிவாரண நிதி தொகையை ஒதுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ரூ. 2000 கோடியை ஒதுக்க வேண்டும்..

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில் இதுபற்றி பதிவிட்டிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, NDRF-இல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார்.