செல்வப்பெருந்தகை, அண்ணாமலை pt web
தமிழ்நாடு

“கச்சத்தீவைக் கொடுத்ததுதான் ராஜதந்திரமா? அப்படியானால் எங்களுக்கு சில கேள்விகள்” - அண்ணாமலை!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது ராஜதந்திரம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய கருத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கேஷ்வர்

கச்சத்தீவைக் கொடுத்தது ராஜதந்திரம்

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது ராஜதந்திரம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய கருத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை புதிய தலைமுறை டிஜிட்டலுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், கச்சத்தீவினை இலங்கைக்குக் கொடுத்தது ராஜதந்திரம் எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ராஜதந்திரம். இதுபுரியாது. கச்சத்தீவுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. கொடுத்த கச்சத்தீவு என்பது சிறிய பகுதி. ஆனால், கச்சத்தீவை சுற்றிவளைத்து எவ்வளவு இடங்களை எடுத்திருக்கிறார்கள் தெரியுமா? உதாரணத்திற்கு நீங்கள் சென்னையைக் கொடுத்து ஆறு முதல் 7 மாநிலங்களைப் பெற்றதுபோல். ஆகையால் இந்திரா காந்தி ஒரு முடிவு எடுக்கிறார் என்ரால் அது சாதாரண முடிவு கிடையாது. மிகப்பெரிய ராஜதந்திர முடிவு. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்திராகாந்தியை சாதாரணமாக யாரும் எடைபோட்டுவிட முடியாது.

சிறிய நாட்டுக்கு அஞ்சி யாராவது இப்படிச் செய்வார்களா?

பாபா அணு ஆராய்ச்சி மையம் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தியா பெற்ற பகுதிகளில் உலகத்திலேயே இல்லாத கனிமவளங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். விலைமதிக்க முடியாத கனிமவளங்கள் இருந்தது. இந்த தேசத்தை மேன்மைப்படுத்த முடியும், மேலே கொண்டு வரமுடியும், வல்லரசாக்க முடியுமென்பதில் இந்திராகாந்தியின் திட்டம்தான் சிறிய பகுதியைக் கொடுத்து மிகப்பெரிய கடற்பரப்பை எடுத்தது.

நாம் மிகப்பெரிய நாடு. இலங்கை சிறிய நாடு. ஒரு சிறிய நாட்டுக்கு அஞ்சி யாராவது இப்படிச் செய்வார்களா? நம் நாட்டுக்கு எதாவது பயன் இருந்தால்தான் கொடுப்பார்கள்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைப் பிடிப்பது வேறு ஒரு பிரச்னை. அதையாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், சர்வதேச கடற்பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறார்களே அதுவெல்லாம் இந்திரா காந்தி விரிவாக்கம் செய்த சர்வதேச எல்லை.

பாஜக ஏமாற்றுகிறது

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் உயிரிழக்க மாட்டார் என 2014 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த கடல் தாமரை மாநாட்டில் சொன்னார்கள். தற்போது மீனவர்கள் சாகாமல் இல்லையா? துப்பாக்கிச்சூடு படாமல் இல்லையா? சிறைப்பிடிக்கப்படாமல் இல்லையா? உண்மைக்குப் புறம்பான போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை மீனவர்களை ஏமாற்றுகிறார்கள்.

கச்சத்தீவை கொடுத்ததில் எவ்வித தவறும் இல்லை என்றுதான் அறிவியல்பூர்வமாக விஞ்ஞானப்பூர்வமாக சொல்கிறார்கள். அதேநேரத்தில் கச்சத்தீவைக் கொடுத்துவிட்டு எவ்வளவு பெரிய இடத்தினை எடுத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு சில கேள்விகள்

இந்நிலையில் செல்வப்பெருந்தகை பேட்டி தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறுகிறார்.

எங்களுக்கு சில கேள்விகள். கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா?

பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா? மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா?

கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்?” எனத் தெரிவித்துள்ளார்