“பிரபாகரனைப் பற்றி சீமான் பேசுவதெல்லாம் பொய்; அனைத்தையும் அம்பலப்படுத்துவோம்” - திருமுருகன் காந்தி
பெரியார் குறித்துதொடர் சர்ச்சை கருத்து கூறி வரும் சீமான் - வலுக்கும் எதிர்ப்பு
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி அவரது வீட்டை மே 17 உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஒரு மாதமாகவே பெரியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரின் கருத்துக்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விசிக, பாமக, பெரியாரிய இயக்கங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
சீமான் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவித்த பெரியாரிய அமைப்புகள்
இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் பெரியார் குறித்து சீமான் பேச நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு பெரியார் ஆதரவு அமைப்புகள் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்திருந்தார். 22 ஆம் தேதி, அதாவது இன்று 32 பெரியாரிய உணர்வாளர்கள் இயக்கத்தினர் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீமான் உருவபொம்மை எரித்ததால் பரபரப்பு
திட்டமிட்டபடி இன்று காலை 9 மணி முதல் திருமுருகன் காந்தி மற்றும் கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கினர். முன்னெச்சரிக்கையாக பாலவாக்கத்திலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட, சீமானின் வீடு அமைந்துள்ள இரண்டாவது கடற்கரை தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தடையை மீறி போராட்டக்காரர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றதாலும் அவரின் உருவ பொம்மையை எரித்ததாலும் அந்த பகுதி பரபரப்பானது.
அதிக அளவிலான பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் அவர்களை கட்டுப்படுத்த மகளிர் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசி முடித்ததும் போராட்டக்காரர்கள் 25 வாகனங்களில் கைது செய்யப்பட்டனர். சீமான் தனது கருத்தை திரும்பப் பெறவில்லை என்றால் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமுருகன் காந்தி புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார்.
“தோழர் தமிழரசனை இழிவுபடுத்தியவர் சீமான்”
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், “சீமானுக்கு தமிழ்தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. தோழர் தமிழரசன் நான்கைந்து கோட்பாடுகளில் ஒன்றையாவது சொல்லச் சொல்லுங்கள். தோழர் தமிழரசனை தேங்காய் சில்லு என இழிவுபடுத்தியவர் சீமான். அவருக்குத் தமிழ்தேசியம் என்றால் என்னவென்று தெரியும்.
சீமான் இந்த அவதூறை திரும்பத் திரும்ப பேசட்டும். அப்படியானால்தான், நாங்கள் இந்த அவதூறை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்க முடியும். சீமான் 15 ஆண்டுகளாக பிரபாகரனைப் பற்றி பேசுவது பொய், பெரியாரைப் பற்றி பேசுவது பொய். அவர் பேசுவதெல்லாம் பொய் என்பது அம்பலமாக இதுதான் வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.
”சீமானை வரச்சொல்லுங்கள்..”
இந்நிலையில் திருமுருகன் காந்தியின் கட்சி அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் தேனாம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், அது தன்னுடைய கட்சி அலுவலகமே இல்லை என திருமுருகன் காந்தி தெரிவித்தார். அவர் கூறுகையில், “தேனாம்பேட்டையில் இருப்பது எங்களது கட்சி அலுவலகம் இல்லை. எங்கள் தோழர் ஒருவரின் புத்தகக் கடை. நாங்கள் நாள் அறிவித்து, போஸ்டர் ஒட்டி எல்லோரும் இங்கு திரண்டு இருக்கும்போது கோழைகள் மாதிரி தோழர் ஒருவரின் கடையை முற்றுகையிட்டீர்கள் என்றால் உங்களை நான் என்னவென்று சொல்வது. நாங்கள் இங்குதானே இருக்கின்றோம். சீமானை வரச்சொல்லுங்கள். வீழ்ந்துவிடாத வீரம் , மண்டியிடாத மானம் என சொல்லுகிறீர்களே, வெளியில் வரவேண்டியதுதானே.” எனத் தெரிவித்தார்.
பெரியார் தொடர்பாக சீமான் பேசிய பேச்சு மற்றும் அவரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை தாங்கி போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டு வேளச்சேரி திருவான்மையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். போராட்டம் காரணமாக திருவான்மையூரில் இருந்து நீலாங்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையில் பிற்பகல் ஒரு மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.