கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபக்கம், இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபக்கம், இந்தச் சம்பவம் நடந்த அன்றே விஜயிடம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவரோ அது எதையும் காதில் வாங்காதபடி நடந்து சென்றார். பின்னர், இரண்டு நாட்களாகியும் இதுகுறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ”நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் சி.எம் சார். உண்மை விரைவில் வெளியில் வரும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜய் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார். "ஆனந்த் மீது வழக்கு தொடுத்திருக்கும் தமிழ்நாடு காவல்துறை விஜய் மீது வழக்கு தொடுக்காதது ஏன்? அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். திமுகவுக்கும் விஜய்க்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்கிறது என சொல்லலாமா? அவர்கள் பாஜகவுக்கும் திமுகவுக்கும் டீலிங் இருக்கிறது என சொல்வதுபோல் இதையும் சொல்லலாமா? தமிழ்நாடு காவல்துறையின் அணுகுமுறை நல்லதல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவனின் விமர்சனத்துக்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலளித்துப் பேசியுள்ளார். புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அவர் அளித்திருக்கும் தொலைபேசி பேட்டியில், “ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை விசாரிக்கிறது. அறிக்கை வெளிவந்த பின்தான் யார் குற்றவாளி என்று முடிவு செய்து நடவடிக்கை எடுக்கமுடியும். உள்ளூரில் சில நிர்வாகிகள் செய்த தவறு தெரியவந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். விஜய் மீது நடவடிக்கை வேண்டுமா இல்லையா என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்கு பின்தான் முடிவெடுக்க முடியும். விஜய் வந்தார் பேசினார் சென்றுவிட்டார். அங்கு நடந்த நிகழ்வுகளுக்கு அவரைப் பொறுப்பாக்குவது எப்படி என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “விஜய் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாலேயே திருமாவளவன் அவ்வாறு பேசியிருக்கிறார். ஆனால், ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். விஜய் எதிர்க்கும் ஒரே கட்சி திமுக தான். அதை விஜயும் மேடைக்கு மேடை சொல்லி வருகிறார். அது திருமாவளவனுக்கும் தெரியும் அப்படி இருக்கும் போது, ஏன்? திமுகவுக்கும் விஜய்க்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்கிறது என திருமாவளவன் சொல்கிறார் எனத் தெரியவில்லை” என தெரிவித்திருக்கிறார்.