இயற்கை எரிவாயு கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் - ஓஎன்ஜிசி pt desk
தமிழ்நாடு

திருவாரூர் | காரியமங்கலம் கிராம இயற்கை எரிவாயு கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் - ஓஎன்ஜிசி நிர்வாகம்

மன்னார்குடி அருகே உள்ள காரியமங்கலம் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஓஎன்ஜிசி மூலம் தோண்டப்பட்ட கிணறு நிரந்தரமாக மூடப்படும் என்று ஓஎன்ஜிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: C.விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரியமங்கலம் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஓஎன்ஜிசி மூலம் கிணறு தோண்டப்பட்டது. அப்போது கடந்த 2013 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமாக இயற்கை எரிவாயு வெளி வந்ததால், அந்தக் கிணறு தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடக்கப்பட்டன.

இந்த எரிவாயு கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கும், அங்குள்ள தளவாட பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டுமென அந்தப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், மற்றும் பிஆர். பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ONGC

இது தொடர்பாக நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த சூழலில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி எரிவாயு கிணறு அமைந்துள்ள காரியமங்கலத்தில் மன்னார்குடி கோட்டாட்சியர் யோகேஸ்வரன் தலைமையில் நேற்று கலந்தாய்வு மற்றும் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஓஎன்ஜிசி சார்பில் காவிரி படுகை ஓஎன்ஜிசி நிர்வாக இயக்குனர் மாறன் மற்றும் அதிகாரிகளும், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், காரியமங்கலம் கிராம மக்கள் சார்பில் ரபீக் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சு வார்த்தையில் எரிவாயு கிணறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது அதனை நிரந்தரமாக மூடுவதோடு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஓஎன்ஜிசி-யின் அனைத்து தளவாடப் பொருட்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எரிவாயு கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கு எடுக்கும் நடவடிக்கை மட்டுமே விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என வலியுறுத்தி பேசினர்.

அதனைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஓஎன்ஜிசி எரிவாயு கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

பி.ஆர்.பாண்டியன்

இது தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்....

ஒன்றரை ஆண்டுகளுக்குள் காரியமங்கலம் ஓஎன்ஜிசி எரிவாயு கிணறு முற்றிலும் அகற்றப்படும் என்கின்ற அதிகாரிகளின் அறிவிப்பு நம்பிக்கை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த ஜெகபரவி என்கின்ற போராளி, கனிம வள கொள்ளை குறித்து அரசுக்கு தகவல் கொடுத்ததற்காக லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற போராளிகளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

காவிரி படுகை ஓஎன்ஜிசி நிர்வாக இயக்குநர் மாறன் கூறும்போது... :

விவசாயிகள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இந்த காரியமங்கலம் எரிவாயு கிணறுகள் அறிவித்தபடி ஒன்றை ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிரந்தரமாக மூடப்படும் என்று தெரிவித்தார்.