தி.மலை | 3 கிலே தங்க ஆபரணங்களை அணிந்தபடி அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த ஆந்திர தொழிலதிபர்!
செய்தியாளர்: மகேஸ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ், எப்பொழுதுமே கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்வது வழக்கம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த அவர், 3 கிலோ எடை ஆபரணங்களை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்தனர்.
கோயிலுக்கு வந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் கோயிலில் உள்ள சம்பந்த கணேசர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து நவகிரக சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.