கல்லூரி மாணவிகள் புகார் pt desk
தமிழ்நாடு

கல்யாணம் பண்ணிட்டு நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வர்ற - துறைத் தலைவர் மீது கல்லூரி மாணவிகள் புகார்

செய்யாறு அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு வரலாற்றுத் துறை மாணவர்கள் போராட்டம், மாணவர்களிடம் அவதூறாக பேசும் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: புருஷோத்தமன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இதில், சுமார் 8,000-க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர். வரலாற்றுத் துறையில் இளங்கலை பாடப்பிரிவில் முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டுகளில் சுமார் 900 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முருகேசன், அரசியல் அறிவியல் பிரிவு துறை பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இதனால் வரலாற்றுத் துறைக்கு கடந்த இரண்டு மாதங்களாக பாடம் எடுக்க வராததால் மாணவர்கள் அவரிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது மாணவர்களை பார்த்து அவர் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதேபோல் திருமணம் செய்து கொண்டு படிக்க வரும் மாணவிகளிடம், "கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற" என்று கேட்டதாக மாணவிகள் தெரிவத்தனர். இதனால் வரலாற்றுத் துறை மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு கூடி, துறைத் தலைவர் முருகேசன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி சண்முகவேலன் தலைமையிலான போலீசார், போராட்டம் நடத்திய மாணவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை அழைத்துச் சென்று முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.