செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள பின்னலாடை நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான் (37), அவருடைய மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவதும் தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூரில் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.