1 மாத குழந்தையை மீட்ட காவல்துறையினர்
1 மாத குழந்தையை மீட்ட காவல்துறையினர் pt desk
தமிழ்நாடு

‘வயிறு வலிக்குது; பாத்ரூம் போயிட்டு வர்றேன்’ - எனக்கூறி 1 மாத குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற பெண்!

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் கேண்டீன் நடத்தி வருபவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள். இவர், நேற்று காலை தனது சொந்த ஊருக்குச் செல்ல திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்துக்காக காத்திருந்தபோது, அருகில் 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றுள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தை

இந்நிலையில், அந்தப் பெண் சிறிது தயக்கத்துடன் வயிறு வலிப்பதாக கூறி அருகில் உள்ள பாத்ரூம்-க்கு சென்று வருவதாக தெரிவித்ததோடு தான் வைத்திருந்த கைக்குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி செல்லம்மாளிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அப்பெண் திரும்பாத நிலையில், தனது ஊருக்குச் செல்ல வேண்டிய செல்லம்மாள் செய்வதறியாது இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேருந்து நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நடந்ததை செல்லம்மாள் கூறியுள்ளார். இதையடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள தென்புற காவல் நிலையத்திற்கு செல்லம்மாளை அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்லம்மாள் வைத்திருந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Ambulance

இந்நிலையில், இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.