சென்னை | 2 நாட்களாக குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை - பத்திரமாக மீட்ட பெண்

பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையை குப்பையில் வீசி சென்ற மர்ம நபர்கள். இரண்டு நாட்களாக அழுது உயிருக்குப் போராடிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட பெண்.
Girl baby
Girl babypt desk

செய்தியாளர்: ஆவடி நவீன்

பூந்தமல்லி, ராமானுஜ கூட தெருவில் தனியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பூனை குட்டி கத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று சத்தம் அதிகமானதையடுத்து யுவராணி என்ற பெண் தனது வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

Baby rescued
Baby rescuedpt desk

அப்போது பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் துணி இல்லாமல் குப்பைத் தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் இருந்த பெண் குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையை இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கு வீசி சென்றதும் இரண்டு தினங்களாக குழந்தை அழுதபடி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Police
Policept desk

பிறந்த சில தினங்களே ஆன பெண் குழந்தையை ஈவு இரக்கமின்றி குப்பை தொட்டியில் வீசிய நிலையில் உயிருக்கு போராடிய குழந்தையை பெண் ஒருவர் துணிச்சலுடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் குழந்தை சுத்தம் செய்யப்பட்டு முதலுதவி முடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு தினங்களாக போராடி அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைக்கு அதிர்ஷ்ட லட்சுமி என பெயர் சூட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com