கைதான ராணுவவீரர் விஜயகாந்த்
கைதான ராணுவவீரர் விஜயகாந்த் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருப்பத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராணுவவீரர் கைது

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம் கோனேரி குப்பம் அருகே உள்ள பாட்டன் வட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (32). இவருக்கு, திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் 14 வருடங்களாக ராணுவ வீரராக மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

விஜயகாந்த்

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி விடுமுறையை கழிக்க ஊருக்கு வந்த விஜயகாந்த் அதே மாவட்டத்தை சேர்ந்த தனது நண்பரொருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயகாந்த் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தனது நண்பரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி சென்றுள்ளார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பனின் எட்டு வயது மகளுக்கு விஜயகாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாதென கொலை மிரட்டல் விடுத்தததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து சிறுமி தனது தந்தையிடம் நடந்ததைக்கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அத்தந்தை, விஜயகாந்தை தேடிச் சென்ற போது அவர் தனது பைக்கில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராணுவ வீரர் விஜயகாந்தை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

(இதை வாசிக்கும் குழந்தைகளுக்கு : உங்கள் உடல் பாகங்களின் மீது யாரொருவர் கைவைத்தாலும் - உங்களிடம் கொலை மிரட்டல் விடுத்தாலும் - உங்களை துன்புறுத்தினாலும், உடனடியாக அதை உங்கள் அம்மா, அப்பா, ஆசிரியர் என நம்பிக்கைக்குரியவரிடம் கூறுங்கள். உதவி கிடைக்கவில்லை எனில், 1098 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்து, புகார் தெரிவியுங்கள். உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் காக்கப்பட்டு, குற்றம் செய்தவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.)