EPS pt desk
தமிழ்நாடு

“நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும்” - இபிஎஸ்-க்கு தொண்டர்கள் கடிதம்

நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இரண்டு தொகுதிகளை 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

“நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளை 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் 2 தொகுதிகளிலும் அதிமுக கட்சியும் தொண்டர்களும் அழிந்து நெல்லையில் அதிமுக இல்லை என்ற நிலை ஏற்படும்” என நெல்லை அதிமுக மாநகர முன்னாள் துணைச் செயலாளர் குமார் என்பவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை:

அந்தக் கடிதத்தில் “நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள், நெல்லை மாநகர மாவட்ட கழக கோட்டையாகும். இந்த தொகுதிகளில் 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிமுக வீழ்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக ஐந்து முறை போட்டியிட்டு இரண்டு முறை தோல்வி அடைந்து அதிமுக தொண்டர்களின் உழைப்பில் ஆதரவில் வாக்குகளை பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். (நயினார் நாகேந்திரன்). இவர் கட்சி வளர்ச்சிக்கு தொண்டர்கள் பொதுமக்கள் நலன்களுக்கு மாவட்ட வளர்ச்சிக்கும் எந்த பணியும் செய்யவில்லை.

அதிமுக அழிவுப் பாதையில் இருந்து வருகிறது:

சட்டமன்ற உறுப்பினர் தனது குடும்பம் மற்றும் தனது சாதி உறவினர்களின், மைத்துனர்களின் நலனுக்காக மட்டுமே உழைத்து வருகிறார். பணத்தை சொத்தை குவித்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வருவதும் இல்லை. செயல்படுவதும் இல்லை. இரட்டை இலை சின்னத்திற்கு, தாமரை சின்னத்திற்கு வாக்களித்த நெல்லை, பாளையங்கோட்டை பொதுமக்கள் கழக தொண்டர்கள் நிர்வாகிகள் தெருவில் நிற்கிறார்கள். அதிமுக கட்சி அழிவுப் பாதையில் இருந்து வருகிறது. தொண்டர்கள் மிக மிக மோசமான பாதிப்பில் கஷ்ட நஷ்டத்தில் 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள்.

aidmk - bjp

நெல்லை பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும்:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தங்கள் பிறந்தநாளில் நெல்லை மாநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கழகத் தொண்டர்களின் கட்சியை வளர்ச்சி நலனை கருத்தில் கொண்டு மிக மிக கவனமாக பரிசீலனை செய்து வேண்டும். நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 2026 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற ஆவணம் செய்ய வேண்டும். 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் இனிவரும் காலங்களில் நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கட்சியும் தொண்டர்களும் அழிந்து அதிமுக நெல்லையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த உண்மையான சூழ்நிலைகளை அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய தலைவர்களின் உண்மையான விசுவாசிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பணிவுடன் வேண்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுளார்.