செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில் இருந்து இரும்புலிச்சேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு மேம்பாலம் இருக்கிறது. இந்த மேம்பாலம் அப்பகுதியில் இருக்கும் இரும்புலிசேரி, சின்ன எடையாத்தூர், அட்ட வட்டம், சாமியார் மடம், சேவூர் ஆகிய ஐந்து கிராமங்களை இணைப்பதால், அப்பகுதி மக்கள் அந்த பாலங்களை உபயோகப்படுத்தி கடந்து சென்று வந்தனர். இந்த மேம்பாலமானது கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த பெரும் மழையின் காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஐந்து கிராமமக்களும் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை உருவாகியது. இதனால் பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும், மருத்துவமனை மற்றும் அவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலாற்றின் குறுக்கே சாலை அமைத்து வீராணம் குழாய்களைக் கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆண்டுதோறும் பெய்து வரும் மழையால் கடந்த 9 ஆண்டுகளாக மழைக்காலங்களில் இந்த தற்காலிக பாலமானது சிதிலமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.
சமீபத்தில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தற்காலிக பாலமானது நீரில் மூழ்கி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளை தமிழக அரசு உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.