திடீரென உள்வாங்கிய கடல் pt desk
தமிழ்நாடு

திருச்செந்தூர் | திடீரென 80 அடி உள்வாங்கிய கடல் - பாறைகள் மீதேறி புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்!

திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியதால் வெளியே தெரியும் பச்சை நிற பாசி படிந்த பாறைகள். அச்சமின்றி புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்த கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கோயில் முன்புள்ள கடற்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கடல் அவ்வப்போது உள்வாங்கி வந்த நிலையில், கடந்த 6 மாத காலத்திற்கு பிறகு கடல் மீண்டும் அவ்வப்போது உள்வாங்கி வருகிறது. இதையடுத்து இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது.

இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் உள்வாங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வ தீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் 80 அடி உள்வாங்கி காணப்படுகிறது.

கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. இதையடுத்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பச்சை பாசிகள் படிந்த பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.