கரூர் விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை வைத்ததுடன், அடுக்கடுக்காகச் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபக்கம், இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக, கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபக்கம், இந்தச் சம்பவம் தொடர்பாக அன்றே விஜயிடம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவரோ அது எதையும் காதில் வாங்காதபடி நடந்து சென்றார். பின்னர், இரண்டு நாட்களாகியும் இதுகுறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ”நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். உண்மை விரைவில் வெளியில் வரும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர், “ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் அழுத்தம் கொடுத்தனர்; அந்தப் பிடியில் சிக்கிக் கொள்ளக்கூடாதென மிகவும் எச்சரிக்கையாக ரஜினி அவற்றை தவிர்த்துவிட்டார். மேலும் ரஜினிக்கு பதவி மீதோ, அதிகாரத்தின் மீதோ மோகம் இல்லை. முதலமைச்சராக வேண்டும் என்ற வெறியோ, வேட்கையோ இல்லை. விஜய்க்கு வந்த நாள்முதல் அதிகாரத்தின் மீதும் ஆட்சியின் மீதும்தான் மோகம். அதனால்தான் குறிவைத்து திமுகவைச் சாடுகிறார். இதுபோன்ற காரணங்களால்தான் கருத்தியலாகவோ, தான் என்ன தமிழ்நாட்டுக்கு செய்யப்போகிறேன் என்றோ பேசாமல் திமுக வெறுப்பை மட்டும் முன்வைத்தார் விஜய்.
இப்படியானவர்கள் நிறைய பேரை ஆர்.எஸ்.எஸ். உள்ளே இறக்கிவிட்டுள்ளது. விஜய் போன்ற சக்திகளை வைத்து திமுக, அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக காலூன்றிவிட்டால், பின் இவர்களை (விஜய்) அப்புறப்படுத்துவது அவர்களுக்கு (பாஜக-விற்கு) மிகவும் எளிது. அண்ணா ஹசாரேவைப் பயன்படுத்தி டெல்லியில் காங்கிரஸை தூக்கி எறிந்தது பாஜக. பின் கெஜ்ரிவாலை அப்புறப்படுத்திவிட்டு பாஜக வந்துவிட்டது. இதுதான் நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும். ஓரிரு தேர்தலுக்கு விட்டுப் பிடிப்பதே அவர்கள் வழி. அந்தவகையில் தற்போது நடப்பவையாவும் கலவர பூமியாக தமிழ்நாடு மாற அடித்தளமே. விஜய் மேல் ஏன் வழக்கு போடவில்லை? அவரை வீட்டில் உட்காரவைத்து, அவர் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. விஜய் என்ன வேண்டுமானாலும் பேச அனுமதிக்கப்படுகிறார். ‘CM Sir, எங்கிட்ட மோதுங்க’ என்றெல்லாம் சவால் விடுகிறார் விஜய். இவ்வளவு செய்தபின்னும் அவர்மீது ஏன் காவல் துறை நடவடிக்கை இல்லை எனில், தமிழ்நாடு அரசுக்கும் விஜய்க்கும் Underground Dealing இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.