எலுமிச்சை பழம் ஏலம்
எலுமிச்சை பழம் ஏலம் PT WEB
தமிழ்நாடு

திருவெண்ணெய்நல்லூர் | ரூ. 2 லட்சத்திற்கு ஏலம் போன 9 எலுமிச்சை பழங்கள்... அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

webteam

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில் வேல் மட்டுமே உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா நாட்களில், முருகன் வேலில் சொருகப்படும் 9 நாள் எலுமிச்சம் பழங்களை இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர் பங்குனி உத்திர திருவிழா

இந்த எலுமிச்சை பழத்தினை வாங்கி சென்றால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் இந்த ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். இடும்பன் பூஜைக்குப் பிறகு கோயிலின் தலைமை பூசாரி ஆணி பதித்த காலணியில் நின்று ஏலத்தைத் தொடங்கினார்.

அப்போது குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் உற்சவ எலுமிச்சை பழம் 50,500 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த எலுமிச்சை பழத்தை, தி. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் கனிமொழி தம்பதி ஏலம் எடுத்தனர்.

பூசாரி காலில் விழுந்த தம்பதி

எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர்.

கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம்

இந்த நிகழ்ச்சியின் இறுதியாக இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம், பிரசாதமாக பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக முருகன் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய் விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டுச் சென்றனர்.