செய்தியாளர்: மா.மகேஷ்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக நேற்று இரவு 8.47 மணி முதல் இன்று இரவு 10.37 மணி வரை என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு முதலே திருவண்ணாமலைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்தனர்.
இரண்டாவது நாளாக இன்று காலை முதலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டுச் செல்கின்றனர். இதையடுத்து கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மேல் கிரிவலம் முடித்த பக்தர்கள், சென்னை, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறோம் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டிவனம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கு வந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.