செய்தியாளர்: செ.சுபாஷ்
மேலவளவு செல்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்...
மேலவளவு அரசியல் உரிமை போராளிகளின் வீரவணக்க நாள் இன்று. மேலவளவு முருகேசன் மற்றும் அவருடைய தலைமையிலான தோழர்கள் ஏழு பேர் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்ட துயரமான நாள். இந்த நாளில் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தோழர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன். சாதிய வன்கொடுமையாக கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மேலவளவு கிராமத்தை அரசு சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கி இருக்கிறோம். அந்த கிராமத்தில் உள்ள எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லை. எனவே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பங்களை இடிப்பதிலேயே அதிகாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்:
தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு நீதித்துறை வழங்கி இருக்கிற தீர்ப்பு ஒரு ஜனநாயக படுகொலை. அரசியல் கட்சிகள் இதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் முதலில் விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பங்களை இடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். பல அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கல் அப்படியே பாதுகாப்பாக இருக்கிறபோது விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அதிகாரிகள் முனைப்பாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?
ஏற்கனவே இதைப்பற்றி நான் சொல்லி இருக்கிறேன். அமித்ஷா அவர்கள் மட்டும்தான் திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை சொல்லி வருகிறார். இதுவரையில் அதிமுக தலைவர் அவருடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தேன். தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற பதில் பாஜகவுக்கு தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கூட்டணி ஆட்சி இன்று இல்லை அதிமுக அதற்கு உடன்படாது என்கிற விடையை பாஜகவினருக்கு தான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
அதேபோல அதிமுகவை எந்த கொம்பனாலும் கபலிகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார் கபலிகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும் அதிமுகவை, திமுக தலைமையிலான கட்சியில் கபலிகரம் செய்ய முயற்சிக்க வாய்ப்பு இல்லை அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளவும் முடியாது. கூட இருக்கிற கட்சிகளால் மட்டும் தான் விழுங்குகின்ற முயற்சியை மேற்கொள்ள முடியும். ஆகவே அந்த கருத்தும் பாஜகவுக்கு எதிராக அவர் சொல்லியிருக்கிறார் என்று தான் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் நீங்கள் அதிமுக கூட்டணியில் சேர்வீர்களா?
இது யூகமான கேள்வி என்று பலமுறை சொல்லி இருக்கிறேன் அப்படி ஒரு நிலை வருகிற போது கேள்வி எழுப்புங்கள் பதில் சொல்கிறேன்.
திருப்புவனம் இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு சம்பவம். காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவருடைய உடன்பிறந்த தம்பி தன்னையும் அழைத்துச் சென்று விசாரித்தார்கள், தாக்கினார்கள். காவல்துறையினரின் தாக்குதலால் தான் எனது அண்ணன் உயிரிழக்க நேர்ந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அந்த பகுதியைச் சார்ந்த பொது மக்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, சற்று ஆறுதலை அளிக்கிறது அதே வேளையில் அவர்கள் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், புலன் விசாரணையில் இப்படி உயிரிழப்பு நேர்வதை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு காவல்துறையினருக்கு உரிய வழிகாட்டுதல்களை தர வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் கஸ்டோடியல் டெத் என்பது நிகழக் கூடாது அதை அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கிற போது நாம் சுட்டிக் காட்டி வருகிறோம். ஆனால் இது தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது.
திடீரென திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது என்ன பாசம் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாரே?
பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையால் அல்ல தந்தை மகனுக்கு இடையே ஏற்படுகிற இடைவெளி பெரிதாகி விடக்கூடாது என்கிற அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தை அவ்வளவுதான். தந்தைக்கு இருக்கிற அனுபவத்தை அல்லது அவர் இருக்கிற ஆளுமையை அன்புமணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னேனே தவிர வேறு, எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. அந்த கட்சி எப்படியாவது போகட்டும் என்று நான் கருதவில்லை. அந்த கட்சியும் இங்கே எளிய மக்களுக்காக போராடுகிற கட்சி என்று நம்புவதால் அவர்களுக்கு இடையிலான இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது. அந்த இடைவெளியை பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது. சனாதன பாசிஸ்டுகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள். யாரோ சொல்லுவதை கேட்பதைவிட தந்தை சொல்வதைக் கேளுங்கள் என்று ஒரு பொறுப்பான வார்த்தையாகத்தான் அதை குறிப்பிட்டேனே தவிர பிணைப்பான வார்த்தையாக சொல்லவில்லை என்று திருமாவளவன் கூறினார்.