கேரளாவில் இறந்தவரை தமிழகத்தில் புதைத்த கொலையாளிகள்.. 1 1/2 ஆண்டுக்கு பிறகு வெளியான உண்மை!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேமசந்திரன் வயது 55. இவர் 20 ஆண்டுகளாக கோழிக்கோடு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். இவர் கோழிக்கோடு பகுதியில் ஏல சீட்டு நடத்தும் தொழிலை செய்து வந்துள்ளார். பலரிடம் கடன் பெற்று அதனை சரியாக திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இவர் திடீரென காணாமல் போயிருக்கிறார். ஏப்ரல் 1 ஆம் தேதி அவரது மனைவி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
உயிரோடு இருப்பது போல நம்பவைத்த கொலையாளிகள்!
வயநாடு சுல்தான் புத்தேரி பகுதியை சேர்ந்த அஜீஷ், ஜோதிஷ் மற்றும் ஒருவரிடம் ஹேமச்சந்திரன் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மார்ச் 20 ஆம் தேதி ஹேமச்சந்திரனுக்கு நெருக்கமான பெண் ஒருவர் மூலம் போன் செய்து வரவழைத்துள்ளனர். காரில் ஹேமச்சந்திரனை கடத்திய இந்த மூவரும் வயநாடு மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு வைத்து ஹேமச்சந்திரனை தாக்கி தங்களது பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் அடுத்த தினமே ஹேமச்சந்திரன் உயிரிழந்திருக்கிறார்.
ஹேமச்சந்திரனின் உடலை காரில் வைத்த மூவரும் அதனை கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று புதைக்கவும் செய்திருக்கிறார்கள். ஹேமச்சந்திரனின் செல்போனை கையில் எடுத்துச் சென்ற இந்த கும்பல் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வைத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு போன் செய்திருக்கிறார்கள். ஹேமச்சந்திரன் உயிரோடு இருப்பது போல அவர்களை நம்பவும் வைத்துள்ளனர். இதனிடையே காணாமல் போன ஹேமச்சந்திரன் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அவரது செல்போன் எங்கிருந்து செயல்படுகிறது என விசாரித்து அங்கு சென்று இருக்கிறார்கள். அப்போதுதான் ஹேமச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகள் அஜீஸ் மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அழுகாமல் இருந்த உடல்..
கைது செய்யப்பட்ட அஜீஷ் யை அழைத்து கொண்டு இன்று காலை சேரம்பாடி வனப்பகுதியில் உடல் புதைக்கப்பட்ட பகுதிக்கு கேரள போலீசார் வந்தனர். தமிழக போலீசார் வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஒத்துழைப்புடன் வனப்பகுதிக்குள் புதைக்கப்பட்ட உடலை தேடும் பணி தொடங்கியது. அதற்காக இரண்டு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. மாலை 4 மணி அளவில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சதுப்பு நிலத்தில் உடல் புதைக்கப்பட்டதால் அது அழுகவில்லை. எனவே அந்த பகுதியில் வைத்து அதனை பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்பதால், ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வயநாடு மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு உடலை எப்படி இவர்கள் சோதனை சாவடியை கடந்து தமிழகப் பகுதிக்குள் கொண்டு வந்தனர். காட்டு யானை எப்போதும் நடமாடக்கூடிய இந்த பகுதிக்குள் எப்படி இவர்கள் உடலை எடுத்து சென்று புதைத்தார்கள். எவ்வாறு இவர்கள் இந்த இடத்தை புதைப்பதற்காக தேர்வு செய்தார்கள் என்ற பல்வேறு கேள்விகளுக்கு தற்போது வரை விடை தெரியாமல் இருக்கிறது.
நாளை மதியத்திற்கு மேல் இது தொடர்பான முழு தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் மூன்றாவது கொலையாளி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் கோழிக்கோடு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.