விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூரில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி பிறந்தார். அதன்படி, இன்று தனது 64-வது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார். திருமாவளவனின் பிறந்தநாளை ‘தமிழர் எழுச்சி நாள்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்து, ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி வரும் நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தான், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெறுகிறது. 40 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டிற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டின் காரணமாக, உளுந்தூர் பேட்டையில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில், இந்த மாநாடு குறித்து நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், ”தமிழ்த்தேசியம் எந்த மொழியையும், மதத்தையும் அல்லது பிற தேசிய இனங்களையும் வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ அல்ல என்றும், தமிழர் அடையாளத்தை பாதுகாத்தபடியே இந்தியாவின் பன்மைத்துவ கூட்டாட்சியை வலுப்படுத்தும் அரசியல் பார்வையே தமிழ்த்தேசியம்” எனவும் தெரிவித்திருந்தார். இந்தச்சூழலில் தான், இந்த மாநாடு அரசியல் நிகழ்வாக மட்டுமின்றி தமிழ் மொழி மற்றும் தமிழ் தேசியம் குறித்த கருத்துகளை முன்னிறுத்தும் முக்கிய மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே அறிவித்ததாகவும், தமிழ்த் தேசிய சிந்தனைக் களத்தில் தவெக பயணித்து வரும் நிலையில், விசிக சார்பில் நடத்தப்படும் ”தமிழ் தேசிய எழுச்சி மாநாடு” எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாநாடு தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் புதிய கொள்கை நோக்கங்கள் உருவாகும் ஒரு முக்கியமான களமாக அமையும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், "தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" வெற்றிகரமாக நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தான், விசிக சார்பில் நடைபெறும் தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.