ராமதாஸ் உடனான பிரிவு குறித்து வேதனையோடு பேசிய திருமாவளவன் pt
தமிழ்நாடு

ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது.. யார் எனக்கு துணை நின்றார்கள்? - திருமாவளவன் வேதனை

மருத்துவர் ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது… யாராவது எனக்கு துணை நின்றிருப்பார்களா? முட்டிமோதி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என திருமாவளவன் பேசியுள்ளார்.

Rishan Vengai

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பான சூழலில், ராமதாஸ் தரப்பு பாமக திமுகவில் இணைய விருப்பம் காட்டுவதாக சொல்லப்படும் நிலையில், திருமாவளவனின் விசிக அதற்கு எதிராக நிற்கிறது. தமிழ் உணர்வாளர்கள் ராமதாஸ் பின்னால் சென்றதை நினைவுபடுத்தி, தனது தலைமையை ஏற்றுக்கொள்ளாத சமூகம் குறித்து திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணியில் அமமுக, அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதேநேரத்தில், தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன்

மறுபுறம் புதியதாக களம்கண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் யாரும் கூட்டணி வைக்காத நிலையில், தவெக மற்றும் நாதக போன்ற கட்சிகள் தனித்துப்போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் திமுக கூட்டணியில் என்ன நிகழும், யார் புதியதாக சேரப்போகிறார்கள், காங்கிரஸ்-திமுக இடையே அதிகரித்து வரும் மோதல், ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுகள் குறித்து என்ன கோரிக்கையை முன்வைக்கப்போகின்றனர், புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

திருமாவளவன், ராமதாஸ்

இந்நிலையில் தான் ராமதாஸ் தரப்பு பாமக திமுகவில் இணைய விருப்பம் காட்டுவதாகவும், ஆனால் அதற்கு குறிக்கே திருமாவளவன் தலைமையிலான விசிக நிற்பதாகவும் கூறப்படுகிறது.

ராமதாஸும், நானும் பிரிந்தபோது என்ன நடந்தது..?

திமுகவில் பாமக இணைவதை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு முன்பு பதிலளித்திருந்த திருமாவளவன், ”பாஜக, பாமக அங்கம் வைக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது. பாமக குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே விசிக முடிவு எடுத்து விட்டது. அதில் எந்தமாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.

இந்தசூழலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி மேடையில் பேசியிருக்கும் திருமாவளவன், ”மருத்துவர் ராமதாஸும், நானும் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணத்திற்காக நானும் அவரும் பிரியநேர்ந்தபோது, தமிழ் உணர்வாளர்கள் யார் பின்னால் போனார்கள்?

எல்லோரும் வலுத்தவர் ராமதாஸ் பின்னால் சென்றுவிட்டார்கள். ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர முடியவில்லை. எது தடுத்தது?

அவரை தமிழினக் காவலர் எனக் தூக்கிக் கொண்டாடிய ஒரு நபர் கூட திருமாவளவனுன்கு ஆறுதலாக நிற்கவில்லை. முட்டி மோதி, கரணம்போட்டுதான் திருமாளவன் இன்று நிற்கிறார். என்னை அவ்வளவு எளிதாக இந்த தமிழ்ச் சமூகம் ஏற்கவில்லை. என் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று பேசியுள்ளார்.