ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தீர்மான விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அதில் பேசிய அவர் , "இந்து மதத்தை எதிர்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் அல்ல, ஆனால் சட்ட மேதை அம்பேத்கர் கூற்றின்படி, மதசார்பின்மையை கடைப்பிடிக்காததை எப்போதும் கண்டிப்போம். மத்திய பாரதிய ஜனதா அரசு நாட்டை ஆள மதம் வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. மதசார்பின்மையை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிலிருந்து பின்வாங்காமல் நிலையாக இருப்பதால் எனக்கும் அந்த கட்சிக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் இந்து மதத்தை வெறுப்பது இல்லை. ஆனால் சனாதன தர்மத்தை நிச்சயமாக ஏற்காது. மத சார்பின்மையை கடைபிடிக்கும் அரசுடன் தான் தற்போது விடுதலைசிறுத்தைகள் கை கொடுத்துள்ளது. நாம் ஒன்றிணைந்து உருவாகியது தான் மதசார்பற்ற அரசு. நானும் ரவுடிதான் என்ற வாசகத்திற்கு ஏற்ப தமிழகத்தில் புதிதாக உருவானவர்கள் எல்லாம் தன்னை முதல்-அமைச்சர் என்று கூறிக்கொள்கிறார்கள், இதில் 35 ஆண்டு பொது வாழ்க்கையில் அர்ப்பணித்த எனக்கு முதல்-அமைச்சர் ஆக தகுதி இல்லையா? இவ்வாறு கூட என்னை பலர் திசைதிருப்ப முயன்றார்கள். ஆனால் கொள்கை அடிப்படையில் உறுதியாக உள்ள கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிகமாக கோபம் வருவது ஏன்...எங்களை அவர் கூட்டணிக்கு அழைத்தார் என ஒரு போதும் நான் கூறியதில்லை.. ஆனால் அதிமுக சார்பில் யார் அழைத்தார்கள் என வெளிப்படையாக என்னால் கூற முடியாது. என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டவர்கள் அனைவரும் பாஜகவை ஆதரிப்பவர்கள். பாஜகவை வலுப்படுத்தவே பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பயணம் முடியட்டும் பிறகு, நமது சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாம் என ஆவேசமாக பேசினார் திருமவவன்.
திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல் தலைவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.