தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. எனினும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற எண்ணிக்கை இல்லாத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி வந்தது. காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுடன் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாகவும், அதேசமயம், திமுகவுடனான கூட்டணியில் தொடர்வதாகவும் நேற்று தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து தங்களது முடிவை அறிவிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், நேற்று அவர் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் தான், திருமாவளவன் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்து வந்தது. இந்நிலையில், இன்று மற்ற இடதுசாரி கட்சிகளைப் போலவே தாங்களும் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கபோவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 120 என்ற பெரும்பான்மையை தவெக பெற்றிருக்கிறது. இதன்மூலம், விரைவில் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராகிறார்.
இந்த சூழலில் தவெகவுக்கு ஆதரவளித்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விசிகவின் முடிவு தடையாக இருக்க கூடாது. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற இரு காரணங்களுக்காகவே தவெகவுக்கு ஆதரவளித்தோம். அதேசமயம், நாங்கள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு உள்ள சுதந்திரமான சூழலை கொண்டு தவெக விஜய் ஆட்சி அமைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்கான ஆதரவு வழங்கியிருக்கிறோம். திமுக உடனான எங்கள் உறவில் எந்த சிக்கலும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.