திருமாவளவன்  முகநூல்
தமிழ்நாடு

”பிகாரில் செய்ததுபோலவே தமிழ் நாட்டிலும்.. பாஜகவின் சதியை முறியடிக்க..” - திருமாவளவன்

பிகாரில் செய்ததுபோலவே தமிழ் நாட்டிலும், வாக்குத் திருட்டு மூலம் ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

PT WEB

தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “குளிர்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எஸ்.ஐ.ஆர் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்திருக்கிறோம். வாக்கு திருட்டே, பிகாரில் பாஜக அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆர். படிவங்கள்

இவ்வாறு, இந்த நாட்டின் மக்களின் வாக்குரிமை பறிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை அமைந்துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த ஒரு கோடி பேர் வாக்குரிமையை பறி கொடுப்பதோடு குடியியுரிமியையும் பறிகொடுக்கக்கூடிய அச்சம் ஏற்படுகிறது. மேலும், தேர்தல் ஆணையம் பாஜக அரசு கட்டுப்பாட்டில் சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட மக்களவையில் பதிவு செய்திருக்கிறோம். ஆனால், ஆளுங்கட்சி அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது.

ஆளும் பாஜக அரசிடம் ஜனநாயக சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டும் குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியமையும் பறிக்கக்கூடிய ஆபத்தான அரசியல் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நாடு எந்த திசையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று கவலை மேலோங்கி உள்ளது” எனத் தெரிவித்தார்.

திருமாவளவன்

தொடர்ந்து பேசிய அவர், “பிகாரில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றது போல், தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு பாஜகவினர் சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அமித்ஷா அவர்கள் மக்களவையில் உரத்து பேசுகிறார்; தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்று, மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இதன் மூலம் வாக்கு திருட்டு என்பதை மட்டுமே மூலதனமாக வைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். எனவே பாஜகவின் சதி அரசியலை முறியடிக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.