”மதுரை எய்ம்ஸ் திட்டம் 42% நிறைவு., அக்டோபர் 2026-க்குள் முடிக்க இலக்கு” - மத்திய அமைச்சகம் பதில்!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில்தான், இந்த வருட ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்ததற்கான புகைப்படங்கள் வெளிவந்திருந்தன.
நாடாளுமன்ற குளர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.பி. அருண் நேரு, மதுரை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் திட்டத்தின் நிலை குறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சகத்தின் பதில்!
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த தகவலில், “மதுரை எய்ம்ஸ் திட்டம் பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 2,021.51 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையுடன் (JICA) கடன் ஒப்பந்தத்தின் கீழ் நிதி பெறப்பட்டு வருகிறது. இதுவரை மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்காக ரூ. 421.02 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 30.11.2025 நிலவரப்படி, திட்டத்தின் முன்னேற்றம் 42% ஆகும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிப்பதற்காக அக்டோபர் 2026 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

