Weather Update | தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னையிலும் அதன் புறநகரங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக மிதமான முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் திருத்தணியில் தொடர்ந்து 3ஆவது நாளாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருவத்தூர், வடதண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடந்த சிலநாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
இந்நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.