செய்தியாளர்: J.அருளானந்தம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் தேனி நோக்கிச் சென்ற கேரள மாநில காரும், தேனியில் இருந்து ஏற்காடு நோக்கிச் சென்ற சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு நபர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேனில் பயணித்த 18 பேர் பலத்த காயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த 3 பேரும் கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.