செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை, ரோசனபட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதிகளில் இருந்து ஆண்டிப்பட்டி யானை மார்க்கெட்டிற்கு வெண்டைக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த பகுதிகளில் வீசும் பலத்த காற்றின் காரணமாக வெண்டைக்காய் செடிகள் பாதிக்கப்பட்டு வெண்டைக்காய்கள் சேதம் அடைய தொடங்குவதாலும், உரிய விலை கிடைக்காமல் வெண்டைக்காய் விவசாயத்தை நிறைய பேர் அழித்து வருவதாலும் வெண்டைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் இருந்து ஆண்டிப்பட்டி யானை மார்க்கெட்டிற்கும் வெண்டைக்காய் வரத்து பாதியாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக வெண்டைக்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை மார்க்கெட்டில் ஏலம் போகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ வெறும் 3 ரூபாய் முதல் 4 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போன வெண்டைக்காய் தற்போது 10 மடங்கு அளவிற்கு மார்க்கெட்டில் விலை உயர்ந்து ஏலம் போவதால் வெண்டைக்காய் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.