தவெக அரசு ஆட்சியில் 6 மாதங்களில் பல சாதனைகள் மற்றும் சோதனைகளை சந்தித்தது. இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்பு, காலை உணவு திட்டம் போன்ற திட்டங்கள் பாராட்டப்பட்டாலும், மின்தடை, விலைவாசி உயர்வு, கைதிகள் தப்புதல் போன்ற விவகாரங்கள் அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கின.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனால் ஆட்சியமைக்கும் அளவு பெரும்பான்மை இல்லாத நிலையில், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, IUML, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இதன் தொடர்ச்சியாக ஆட்சியமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தோடு தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோரினார். பின்னர் கடந்த மே 10-ம் தேதி தமிழ்நாடு முதல்வராக விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழலில் நவம்பர் 10-ம் தேதியோடு தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த 6 மாதத்தில் பல்வேறு திட்டங்களை தவெக கொண்டுவந்து பாராட்டை பெற்றிருந்தாலும் பல்வேறு விவகாரங்களில் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்பொருட்டு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம், மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை ஆகிய 3 திட்டங்களில் கையெழுத்திட்டார். அதே போல லஞ்சத்தை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரவலாக அரசு மீது பாராட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் விடியல் பயண திட்டத்தை விரிவாக்கம் செய்து வெற்றிப்பயண திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டமும் விரிவாக்கம் செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. அதே போல அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்கமோதிர திட்டத்தையும் முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். ஊழல் செய்தவர்களை விடமாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக கூறியதைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரணையும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருந்தால் விஜய்யின் பிரத்யேக ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப்பதவி வழங்கி பின்னர் எதிர்ப்பு காரணமாக அதை திரும்பப்பெற்றது, சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று அரசாணை வெளியிட்டு பின் திரும்பப்பெறப்பட்டது, மாணவ, மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி பின் திருப்பப்பெற்றது போன்ற விவகாரங்கள் ஆளும் தவெக அரசு மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தின.
அதே போல மின்தடை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது, தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம், அதிக விலைக்கு மின்சாரத்தினை கொள்முதல் செய்வதாக வெளியான புகார், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அரசு மீது முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த 6 மாதத்தில் தவெக அரசு பல்வேறு ஏற்றங்களையும், இறக்கங்களையும், சவால்களையும் சந்தித்துள்ளது.
வழக்கமாக புதிதாக ஆட்சியமைக்கும் அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற பேசப்படுவதுண்டு. தற்போது அந்த அவகாசம் முடிவடைந்ததால், அரசு மீதான ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக மதிப்பிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.