MP Kanimozhi
MP Kanimozhi pt desk
தமிழ்நாடு

“நேதாஜியை புகழ்ந்து காந்தியை குறைத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி, கோட்சேவின் சொந்தக்காரர்” - கனிமொழி

webteam

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த எம்.பி. கனிமொழிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையிலான நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களான பாய், போர்வை, சேலை, அரிசி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி.

Public meeting

இதைத் தொடர்ந்து அங்கு பேசிய எம்.பி கனிமொழி, “உடல்நிலை சரி இல்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். கலைஞர் கூறியது போல் தொண்டை சரியில்லை என்பதற்காக தொண்டை நிறுத்த முடியாது. தமிழக ஆளுநராக இருப்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை பாராட்டுகிறார். தமிழக மக்களும் நேதாஜியை விரும்புபவர்கள்தான். அவரது புகழை பேசுங்கள், அதை விட்டு விட்டு மகாத்மா காந்தியை குறைத்து பேசுகிறார். இந்த பேச்சில் இருந்தே தெரிகிறது நீங்கள் எல்லாம் கோட்சேவிற்கு சொந்தக்காரர்கள் என்பது.

மாநிலங்களுக்கென உள்ள தனி அடையாளங்களை அடித்து நொறுக்கி விட்டு, அவர்கள் எதை நம் அடையாளம் என நினைக்கிறார்களோ அதனை நம் மீது திணிக்க முயல்கின்றனர். இவ்வாறு நினைக்கும் ஆட்சி அங்கே நடந்து கொண்டிருக்கிறது. குஜராத் வெள்ளத்திற்கு பணம் அளிக்கிறார்கள்; தமிழகம் என்றால் இல்லை என்கிறார்கள். மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு அழிப்பதாக ஒரு தலைவர் கூறியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக நூறு நாள் வேலை திட்டத்தை கூறுகின்றனர். ஆம் மத்திய அரசே நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறது.

RN.

ராமர் கோவில் திறப்பின்போது பூஜைகள் நடத்த தடை கோவிலுக்குச் செல்ல தடை என தமிழக அரசு கூறியதாக பொய் பிரச்சாரத்தை பரப்பினார்கள். கோவில் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கோவிலுக்குச் செல்லக் கூடியவர்கள் நாம். அதன் சொத்துக்களை பாதுகாப்பவர்கள் நாம். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடியவர்கள் நாம். கோவில்களில் குடமுழுக்கு ஒழுங்காக நடக்கிறதென்றால் அது நம் ஆட்சி காலத்தில்தான். இதில் திமுக பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரி என பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

நான்தான் உங்களுக்கு என பொய் சொல்லும் நீங்கள், வெள்ளம் வந்தால் கூட பணம் தர மாட்டீர்கள். எல்லா நலத்திட்டங்களும் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என மக்களுக்காக செயல்படும் ஆட்சி திமுக ஆட்சி. இதே போல் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும்” என்று பேசினார்