உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் இரண்டும் மருத்துவ உலகில் முக்கியமானவை. இதற்கு தகுதியானவர்கள் யார்? இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை விரிவாக இங்கே தெரிந்துகொள்ளலாம்..
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மனிதரின் சராசரி ஆயுள் காலம் 35 முதல் 40 ஆண்டுகள் வரை மட்டுமே இருந்தது. அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சராசரி ஆயுள் 30 ஆண்டுகள்தான் இருந்தது. ஆனால், தற்போது மனிதரின் சராசரி ஆயுள் காலம் 70 ஆண்டுகள் என்ற உச்சத்தை எட்டியுள்ளது என்றால், அதற்கு மருத்துவ அறிவியலின் வளர்ச்சிதான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
மருத்துவம் இந்த அளவு வளர்ச்சி பெற மனிதர்கள் மேல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளே முக்கிய காரணமாக விளங்குகின்றன. இந்த ஆய்வுகள் மூலம் வைரல் தொற்றுகள் மனிதனிடம் எந்தவிதமான தாக்குதல்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும், அதில் இருந்து மீள எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் குறித்தும் மருத்துவர்களுக்கு தெரியவந்தது.
இதன் காரணமாக உடல்தானம் மருத்துவ உலகில் போற்றப்படத்தக்க ஒன்றாக உருவாகியுள்ளது. பலரும் உடல்தானமும் உறுப்பு தானமும் ஒன்று என்றே நம்பி வந்தாலும், இரண்டும் வேறு வேறாகும். உறுப்பு தானம் என்பது விபத்து போன்றவற்றால் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரது இதயம், சிறுநீரகம் போன்றவற்றை எடுத்து மற்றொருவருக்குப் பொருத்துவார்கள்.
ஒரு நபர் உறுப்பு தானம் செய்வதன் மூலம் சுமார் 8 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதோடு இதற்கு பின்னர் குறிப்பிட்ட நபரின் உடல் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் ஒருவரின் மரணத்துக்கு பின்னர் அவரின் உடலை தானமாக மருத்துவமனைக்கு தந்த பின்னர், அவரின் உடல் மருத்துவமனைக்கு சொந்தமானதாகி விடும்.
அந்த நபரின் உடல் மருத்துவ மாணவர்கள் மனித உடலின் பாகங்கள், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பற்றிப் படிக்கவும், அறுவை சிகிச்சை முறைகளைப் பயிற்சி செய்யவும் பயன்படும்.
ஒரு நபர் தனது உடலை தானமாக தர முடிவு செய்தால் அதற்கு அவரின் குடும்ப அல்ல நெருங்கிய உறவினர்களின் ஒப்புதல் கட்டாயமாகும். மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்று அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் கட்டாயமாக கையெழுத்திடவேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
அதே போல உடல் தானம் வழங்குபவர் இறந்த 6 முதல் 10 மணி நேரத்திற்குள் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதும் முக்கியமான விதியாகும். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற சில குறிப்பிட்ட தொற்று நோய்களால் இறந்தவர்களின் உடல்கள், விபத்து அல்லது தற்கொலையால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகள் பெற்றுக்கொள்ளாது. அதே நேரம் இயற்கையாக உயிரிழந்த நபர்களின் உடல்கள் அனைத்தும் உடல்தானத்துக்கு வழங்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.