Chief Secretary changed  x page
தமிழ்நாடு

தலைமைச்செயலர் அதிரடி மாற்றம் | பதவிக்கு வந்த EPSஇன் தனிச்செயலர்.. திமுக அமைச்சர்களுக்கு சிக்கலா?

தமிழ்நாட்டில் தேர்தல் நெருக்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையில் மும்முரமாக உள்ளன.

பொதுவாக தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

sai kumar and muruganandham

அதேபோல தாம்பரம் மாநகர காவல் ஆணையர், மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அடுத்த அதிரடியாக தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில், புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சாய்குமார், தமிழ்நாடு கேடரின் 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். 2018ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராக இருந்தவர்.

மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்சஒழிப்புத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

sandeep mittal

இந்த நிலையில், அந்த துறையின் தலைவர் மாற்றப்பட்டுள்ளது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. புதிய லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியான சந்தீப் மிட்டல் 1995 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில் டெல்லி பணியில் இருந்து தமிழக கேடருக்கு திரும்பினார். சைபர் செக்யூரிட்டியில் ஸ்பெஷலிஸ்ட்டாக திகழ்ந்து வருபவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.