கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்த 6 இடங்களில் திமுக அணி சார்பில் 4 பேரையும், அதிமுக சார்பில் 2 பேரையும் தேர்ந்தெடுக்க முடியும் என்ற சூழல் இருந்தது. அப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்த நிலையில், இந்த பதவிகளைப் பெற இரு கட்சிகளிலும் உள்ள கூட்டணிக் கட்சிகள் தீவிரம் காட்டின. அந்த வகையில், திமுக தேமுதிகவுக்கு ஓர் இடத்தை ஒதுக்கி அந்தக் கட்சியை தனது கூட்டணியில் கொண்டுவந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல் எழுந்த நிலையில், அந்த கட்சியும் 1 மாநிலங்களவை இடத்தை கேட்க, திமுகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்கியது.
தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிக தரப்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போல அதிமுக தரப்பில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட நிலையில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து அந்த கூட்டணியில் இணைந்தது.
இதனிடையே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் அந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், தவெக அந்த இடத்தைக் கைப்பற்றும் சூழல் உள்ள நிலையில், அந்த இடத்துக்கு வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அந்த இடத்தைக் குறிவைத்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததாகப் பேசப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் இதுகுறித்து முதலமைச்சர் விஜயை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவர் கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே காலியாகும் மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கூட்டணி அரசியலை வைத்து வெறும் 5 மாதங்களில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை காங்கிரஸ் கட்சி அள்ளியிருக்கிறது.