madurai dog byte pt web
தமிழ்நாடு

மதுரை | கண்மூடித்தனமாக சிறுவனை விரட்டி விரட்டி கடித்த நாய்.. காப்பாற்ற வந்த தந்தைக்கும் கடி! | CCTV

மதுரையில் 8 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள லேக் ஏரியா, 15-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (40). இவரது 8 வயது மகன் செந்தில், காலை பள்ளிக்குச் செல்ல குளியலறைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

street dogs

அப்போது, திறந்து கிடந்த காம்பவுண்ட் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த ஒரு தெருநாய், குளியலறை அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் செந்திலின் கை, கால் மற்றும் தொடையில் கடித்துக் குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த தந்தை முத்துசாமியையும், அவரது குடும்பத்தினரையும் அந்த நாய் விரட்டி விரட்டிக் கடித்துள்ளது. இதில், முத்துசாமியின் கால் மற்றும் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

நாயின் இந்த வெறிச்செயலால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த நாயைப் பிடித்தனர்.

நாய்க்கடியால் படுகாயமடைந்த சிறுவன் செந்திலுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மூன்று இடங்களில் தையல் போடப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவரது தந்தை முத்துசாமிக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தந்தை, மகனை நாய் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.